சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிண்டி ரயில் நிலையம் அருகே உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவரான பன்னீர்செல்வம் (47) ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சவாரிக்காக சென்ற பன்னீர்செல்வம் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.  இது தொடர்பாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தேடி வந்தனர். இந்நிலையில், கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம் என்பதும் தெரியவந்தது.  முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.