கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டு பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது முற்காலத்தில் நடந்திருக்கிறது. இதை சித்தரிக்கும் வகையில் காட்சிகள் பல திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு கள்ளிப்பால் கொடுப்பதற்காகவே ஒரு வயதான பெண் மணி ஒவ்வொரு கிராமங்களிலும் இருப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அது போன்ற ஒரு சம்பவம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருக்கும் பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓசி ராஜா. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ மதி என்கிற பெண்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த சத்யா, கடந்த மே மாதம் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். அந்த குழந்தையும் பெண்ணாக பிறந்திருக்கிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த கிராமத்தில் மங்கை என்கிற செவிலியர், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வந்திருக்கிறார். சத்யா வீட்டிற்கு வந்த அவர், குழந்தையை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்க்கு, தனது சகோதரியிடம் குழந்தையை கொடுத்திருப்பதாக சத்யா தெரிவித்துள்ளார். அதில் சந்தேகமடைந்த செவிலியர் மங்கை, இதுதொடர்பாக காவேரிப்பட்டினம் வட்டார மருத்துவர் ஹரி ராமிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக பாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

சத்யாவின் வீட்டிற்கு சென்ற காவலர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர்கள், காவல்துறையினரின் கிடுக்குபிடி கேள்விகளால் ஒருகட்டத்தில் குழந்தையை கொலை செய்த தகவலை கூறியிருக்கின்றனர். பெண் குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் இருந்த சத்யாவும் அவரது கணவர் ஓசி ராஜாவும், குழந்தையின் பாட்டி பொட்டியம்மாள் என்பவர் மூலம் பாலில் குருணை மருந்து கொடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பொட்டியம்மாளை கைது செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து சில மாதங்களே ஆன பெண்குழந்தையை சினிமா பாணியில் குருணை மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.