குடும்பம் நடத்தை மனைவியை வீட்டுக்கு அழைத்த வாலிபரை அடித்து உதைத்த மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூரை அடுத்த பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்க்கும் அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வரலட்சுமி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் செல்வேந்திரன் சம்பவத்தன்று மாலை மாமனார் சிவமாயன் வீட்டுக்கு சென்றார். மாமியார் வைரசிலை மற்றும் வரலட்சுமி அங்கு இருந்தனர். அப்போது செல்வேந்திரன் நாம குடும்பம் நடத்தலாம் “என்னுடன் வீட்டுக்கு வா” என்று மனைவியை அழைத்துள்ளார். வர முடியாது என வரலட்சுமி மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. அப்போது செல்வேந்திரனை, அவரது மனைவியும், மாமியாரும் வெளு வெளுன்னு வெளுத்துள்ளனர். அதுமட்டுமல்ல கீழே கிடந்த கட்டையை எடுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அதிலும் மாமியார் அடித்த அடியில் மண்டை இரண்டாக பிளந்துள்ளது. அலறித்துடித்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பக்கத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக செல்வேந்திரன் சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலுசாமி வழக்குப்பதிவு செய்து வரலட்சுமி, சிவமாயன், வைரசிலை ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.