அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாப வாட்ஸ்அப்பில் பரவும் கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில்; அன்புள்ள காவலர் அவர்களுக்கு வணக்கம். எங்கள் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். பாலியல் ரீதியாக 2 மாணவிகளை வற்புறுத்தினர். இதனால் அவர்கள் 2பேரும் பள்ளியை விட்டே நின்று விட்டனர்.

ஆசிரியர் தன் புத்தகத்தை வேண்டுமென்றே கீழே விழவைத்து, அதனை மாணவிகளை எடுக்கச் சொல்லி மாணவிகள் குனிந்து எழும் போது ரசிக்கின்றார். இந்த பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை இவ்வாறு அந்த கடிதத்தில் தனது ஆதங்கத்தை கூறி எழுதியுள்ளார்.

இந்த கடிதம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னாவிடம் கேட்டபோது எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் அதுபோல வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இதுகுறித்து விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமாரிடம் கேட்டபோது இந்த கடிதம் பாதிக்கப்பட்ட மாணவி எழுதிய கடிதமா? எந்த பள்ளியை சேர்ந்த மாணவி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் ஆசிரியர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் யார்? மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.