தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள், நேற்று  சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், விசாரனை நடத்த ஏதுவாகத் தமிழக அரசு எந்த வசதியும் செய்து தரவில்லை என்று கூறினார். 98 சதவிகித நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனவும், தமிழக அரசிடம் கேட்ட 105 பேரில் வெறும் 3 பேர் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

“300க்கும் மேற்பட்ட சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், வழக்கு விவரங்கள் அடங்கிய டைரிகள், சிடிக்கள் ஆகியவற்றை என்னிடம் இருந்து அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இதனால் என்னால் விசாரணையை மேற்கொண்டு நடத்த இயலவில்லை” என்று நீதிபதிகளிடம் பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், தமிழக அரசு மற்றும் டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருச்சி கமாண்டோ அலுவலகத்தை சிறப்பு அதிகாரிக்கு ஒதுக்கி இருப்பதாகவும், சிறப்பு அதிகாரி விசாரணைக்காக அவர் கேட்ட 105 காவலர்களையும் நியமிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொன்மாணிக்கவேலிடம் இருந்து பெறப்பட்ட சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு விவரங்கள் அடங்கிய டைரிகள், சிடிக்கள், ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.

இதேபோல, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கில் இந்து அறநிலையத் துறை ஆணையர் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கோயிலை இடித்து காபி ஷாப் கட்டியது தொடர்பான வழக்கில், இந்து அறநிலையத் துறை அதிகாரி, தாசில்தார், நில அளவையர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்குகள் விசாரணை நடந்தபோது, கோயில்களில் புகைப்படம் எடுக்கப்படுவது பற்றிய கேள்வி நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், புகைப்படம் எடுக்க கோயில் சுற்றுலாத்தலம் அல்ல எனவும், புகைப்படம் எடுக்கத் தடை விதிக்க உகந்த நேரம் வந்து விட்டது எனவும் தெரிவித்தனர்.