மெரினாவுக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் ராஜா, மகள் மற்றும் அருகில் வசிக்கும் சிறுமியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார். மாலை வீடு திரும்பினர்.

அப்போது ராஜாவின் மனைவி, மகள் மிகவும் சோர்வுடனும், ஆடைகள் கிழிந்த நிலையில் இருப்பதை பார்த்து விசாரித்துள்ளார். அதில், மெரினாவில் இருக்கும்போது குதிரை ஓட்டும் அண்ணன் ஒருவர், குதிரையில் உட்கார வைத்து சவாரி செய்தார். பிறகு என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அதன் பிறகு என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து விட்டார் என கூறி அழுதாள். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில், புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மெரினாவில் குதிரை சவாரி நடத்தும் வாலிபர்களில் ஒருவர் சிறுமி தனியாக மெரினாவுக்கு வந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து, சம்பவம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால, இந்த வழக்கை மயிலாப்பூருக்கு மாற்றினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த மாஸ்டர் (எ) செல்வத்தை (24) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.