முன் விரோதம் காரணமாக தந்தையை அவமானப்படுத்தும் விதமாக 7ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை கடத்தி ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி  7ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவரது குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் 14வயது சிறுமியின் தந்தையை பழிவாங்குவதற்காக ஆண்டியின் மகன் குமார் மாணவியை இரவு நேரத்தில் பலவந்தமாக கடத்தி சென்றுள்ளார். நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது மகளை காணாததால் மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் ஆண்டியின் உறவினர் ரவி என்பவரது வீட்டில் அவரது மகள் இருப்பதை அறிந்த அவர், அங்கு துரைச்சாமி மற்றும் சுரேஷ் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்று மீட்க முயன்றுள்ளார். அப்போது நடந்த சண்டையில் ஆண்டி மகன் குமார், சிறுமியின் உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் மாணவியை மீட்டு அவர்கள் அழைத்து வந்தனர். அப்போது 14 வயது மாணவி தன்னை, ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, ரவி, வேலு ஆகிய ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வேப்பங்குப்பம் போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றனர். தற்போது குற்றம்சாட்டப்படும் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.