சென்னையில் இளம்பெண் ஒருவரின் அழகை பார்த்து வியந்து போனதால் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் பின்னாடியே வீட்டுக்கு சென்று தப்பாக நடக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், அந்த இளம்பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளார். 

இளம்பெண் தனது வீட்டி சென்று, மொபட்டை நிறுத்திவிட்டு முதல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் அந்த வாலிபர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்கு சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் நீங்கள் யார்? எதற்கு என் பின்னால் வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், நீங்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த இளம்பெண் நான் எந்த உணவையும் ஆர்டர் செய்யவில்லை என்றார்.

பின்னர், வாலிபர் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரசாந்த் என்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

பின்னர் பிரசாந்த் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ‘நான் வேளச்சேரி வணிக வளாகம் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பெண் மிகவும் அழகாக இருந்ததால் என்னை கவர்ந்தார். நான் சற்று குடிபோதையில் இருந்ததால் உடனே இந்த பெண்ணை என்னுடைய இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னையே மறந்து அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று 5 கி.மீ. தொலைவுக்கு அவர் வீட்டிற்கே சென்றேன். அப்போதும் நான் எப்படியாவது பேச வேண்டும் என்ற நோக்கில் அவரிடம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று கூறியபடி அந்த பெண்ணை நான் பார்த்தேன். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போதையில் நான் ஏதாவது செய்துவிடுவேன் என்று கருதி சத்தம் போட்டாதால் நான் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.