காதல் தோல்வி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொள்ளும் முன் தன்னை ஏமாற்றிய காதலனை காட்டிக்கொடுக்காமல் ஆதாரத்தை அழித்துள்ளதுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி எழில்நகரை சேர்ந்த முதலாளிசாமி மகள் சுப்புலட்சுமி  என்ஜினீயரிங் படித்துள்ளார்.  ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுப்புலட்சுமி கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள தனது சகோதரி கார்த்திகா வீட்டில் வந்து தங்கினார்.

நேற்று முந்தினம் சுப்புலட்சுமியின் அக்கா கார்த்திகாவும், அவரது கணவரும் ஊட்டிக்கு சென்றனர். சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாக சுப்புலட்சுமி தங்கி இருந்த வீடு பூட்டியே கிடந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. உடனே  ஜன்னல் வழியாக பார்த்தபோது சுப்புலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்ததைப் பார்த்த அவர்கள், கூச்சலிட்டு குத்தியதால் அக்கம்பக்கத்தினர் வந்து உடலை கீழே இறக்கினர். தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பு லட்சுமியின் உடலை மீட்டு  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது; தற்கொலை செய்து கொண்ட சுப்புலட்சுமி ஒருவரை காதலித்து உள்ளார். அவர், அந்த நபருடன், நீண்ட நேரம் பேசுவது வழக்கம். அவருடைய செல்போனை சோதனை செய்தபோது யாரிடம் பேசினார் என்ற விவரம் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. எனவே அவர் யாரிடம் எல்லாம் பேசினார் என்ற பட்டியலை தயார் செய்து வருகிறோம்.

முதற்கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து உள்ளது. தூக்கில் தொங்கும்போது கையால் தூக்கு கயிற்றை பிடித்து தப்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவர் தனது கைகளை துப்பட்டாவால் கட்டி உள்ளார். சினிமாவில்தான் இதுபோன்று நடக்கும். அதை பார்த்துதான் சுப்புலட்சுமி தனது கைகளை கட்டிக்கொண்டு தூக்கில் தொங்கி உள்ளார்.

சுப்புலட்சுமி காதலிப்பது அவருடைய சகோதரி கார்த்திகாவுக்கும் தெரியும். அவரும் காதலித்து திருமணம் செய்தவர் என்பதால், தனது தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் யாரை காதலிக்கிறார் என்பது தெரியாது. தற்கொலை செய்யும் முன்பு முன்பக்க கதவை மட்டும் பூட்டிவிட்டு, பின்கதவை பூட்டாமல் விட்டு உள்ளார். எனவே சுப்புலட்சுமியின் காதலர் யார்? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர்கள் கூறினார்கள்.