வேலூர் கோட்டைக்கு இரவு நேரத்தில் காதலனுடன் வந்த இளம்பெண்ணை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் கோட்டையில் கஞ்சா, டோப் எனும் போதை பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மயங்கி கிடக்கின்றனர். போதைக்கு அடிமையான சிறுவர்கள் தங்களை தாங்களே அடித்து கொள்வதுடன், பிளேடால் அறுத்துக் கொண்டும், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுவதாலும் அவர்களை எச்சரித்து மட்டுமே அனுப்ப முடிகிறது. போதை ஆசாமிகள் கோட்டைக்கு வருபவர்களை தாக்கி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகின்றது.

இந்நிலையில், வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் (24). இவர் வேலூரில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் வேலை பார்க்கும் இளைஞரும் அந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 18-ம் தேதி இரவு 9 மணியளவில் இருவரும் கோட்டை பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் கும்பல் காதலனை தாக்கி விட்டு, கத்திமுனையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செயின், கம்மல், செல்போன்களை பறித்துக் கொண்டு சரமாரி தாக்கிவிட்டு தப்பினர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த அஜித்(19), சக்தி(19), மணி(41) என்பதும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும்  இரவு நேரங்களில் கோட்டையில் தனியாக இருக்கும் ஜோடிகளிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்து செல்வார்கள். கைதானவர்களில் அஜித் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.