சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்ற கல்லூரி மாணவி ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.இவர் தினமும் கல்லூரி பஸ்சிலேயே கல்லூரிக்கு சென்று வந்தார். அப்போது ராஜசேகர் என்ற இளைஞருடன்  அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் மாணவி தனது காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது ரகசியமாக படம் பிடித்தனர்.

அதனை அந்த மாணவியிடம் காண்பித்த அந்த கும்பல் தங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால் வீட்டில் கூறி விடுவதாக மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். மேலும் அந்த வீடியோவை காட்டி அடிக்கடி தங்களது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா  சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உறவினர்களுடன் புகார் கொடுக்க வந்தார். ஆனால் போலீசார் அதனை வாங்காமல் விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டு பலத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி மல்லிகா இன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அந்த மாணவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கல்லூரி பஸ் டிரைவர் ஒருவர் உள்பட 5 பேர் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பல் இதேபோல 15-க்கும் மேற்பட்டோரை வீடியோ எடுத்து உல்லாசம் அனுபவித்ததாகவும், அதன் மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது..