சென்னையில் கடந்த நில நாட்களாகவே மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் அதிகரித்து வருகிறது. இதை போலீசார் அனுமதியோடு நடந்து வருகிறது என்ற அதிர்ச்சி செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது. 

சென்னையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன. இதில் மசாஜ் குறித்த எந்த பயிற்சியும் இல்லாத பெண்கள், இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களின் நோக்கம், பணம் பறிப்பதுதான். தற்போது சென்னை விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் பணம் வீதம் வசூலித்து வருவதாகவும், இதனால் தான் தெருவுக்கு தெரு மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சை நகரப் பகுதியில் உள்ள வீடு மற்றும் மசாஜ் சென்டர்களில் தீவிர சோதனை செய்ததில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தரகர்கள் மூலமாக இளம் பெண்களைக் கொண்டு வந்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களும் மீட்கப்பட்டனர்.

அதேபோல் தற்போது, திருச்சி மாநகரத்தில் ஸ்பா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு இடங்களில் இருந்த ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாவில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. இதையடுத்து 5 பேரை கைது செய்த போலீசார், 10 பெண்களை மீட்டனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.