நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் ரெசி  ஸ்டூடியோ அதிபர்.கன்னியாகுமரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் கேத்தீஸ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ரெசி, கேத்தீஸ்வரன் வீட்டிற்கு வரும்போது, அவரது சகோதரி அனுஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ரெசி, அனுஷாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு கேத்தீஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ரெசியை கேத்தீஸ்வரன் அவரது நண்பர்கள் பைசல், பழனி ஆகிய 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.

பின்னர் பிணத்தை கரியமாணிக்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பைசல், பழனி ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ரெசி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அனுஷா மனம் உடைந்து காணப்பட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அனுஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுஷா தற்கொலை குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.