பெங்களூரில் பிரிந்து சென்ற தனது காதலியான பிரபல டாக்டரை வெறுப்பேற்றுவதற்காக, அவருடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்ட காதலனை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னையை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடன் படித்த நரேசன் என்பவரை கல்லூரிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்த பின், பெங்களூருக்கு பணிக்கு சென்ற இளம்பெண், அங்கு காதலனுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார். இருவரும் மேற்கத்திய பாணியில் லிவிங் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்த நிலையில், இளம் பெண்ணிடம் இருந்து நகை, ஏடிஎம் கார்ட், டெபிட் கார்ட் உள்ளிட்டவற்றை வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார் நரேசன். 

நாட்கள் செல்லச்செல்ல, நரேசனின் ஊதாரிதனத்தை புரிந்து கொண்ட இளம்பெண், அவரிடமிருந்து விலகியதோடு, மேலும் அவன் தமக்கு தொல்லை தராமல் இருக்க போலீசாரின் உதவியை நாடிய இளம்பெண் தன்னுடைய நகை மற்றும் டெபிட், கிரெடிட் கார்டுகளை திரும்பப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நரேசனை அழைத்து சமாதானம் பேசிய போலீஸார், அவர் அடகு வைத்த நகை மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வாங்கி கொடுத்து பிரச்சனையை அத்தோடு முடித்து வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நரேசன், ஒரு சில நாட்களுக்கு பிறகு தானும் இளம் பெண்ணும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இளம்பெண்ணுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார். 

இதைப் பார்த்து அதிர்ந்து போன இளம்பெண், போலீசாரிடம் இதுகுறித்து மீண்டும் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீஸார், தலைமறைவான இளம்பெண்ணின் முன்னாள் காதலனை தேடி வருவதாக கூறியதோடு, பெண்கள் இதுபோன்ற நபர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என்றும், திருமணத்திற்கு முன்பு இதுபோன்று மேற்கத்திய பாணியில் வாழ்வதைத் தவிர்த்து, பெற்றோரின் அறிவுரைகளை மதிக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.