விபத்தில் கருச்சிதைவு அடைந்த தாய்! மோட்டார் வாகனத் தீர்ப்பாயம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!
பிறக்காத குழந்தையை ஒரு நபராகக் கருதலாம் என்றும் விபத்து நடக்காமல் இருந்திருந்தால் குழந்தை இந்த ஆரோக்கியமாகப் பிறந்திருக்கும் என்றும் தீர்ப்பாயம் கூறியது.
பைக்கும் சுற்றுலாப் பேருந்தும் மோதிய விபத்தில் கருச்சிதைவு அடைந்த 40 வயது பெண்ணுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சத்தை வட்டியுடன் இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு குர்கானில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் பைக்கோல் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சுற்றுலா பேருந்து ஒன்று பைக் மீது மோதியுள்ளது. பைக்கை ஓட்டிச் சென்ற கணவர் இந்த விபத்தில் பலியாகிவிட்டார். ஏழு மாத கருவுடன் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணுக்கும் வயிற்றில் பலத்த அடி பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் அனுமதித்தபோது, பெண்ணின் வயிற்றில் இருந்த 7 மாதக் கருவை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது.
இந்த விபத்து தொடர்பாக குர்கானைச் சேர்ந்த அமோல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மீது மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பாயத்தில் 9 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்வேறு வகைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் விபத்தில் இறந்ததால், வாழ்க்கைத் துணையின் இழப்புக்குக் காரணமாக இருந்ததற்காக வட்டியுடன் 2.4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மற்றொரு உத்தரவில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக வட்டியுடன் ரூ.24 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கரு கலைந்தது தொடர்பாகவும் ஒரு முக்கிய உத்தரவைத் தீர்ப்பாயம் அளித்துள்ளது. கருவுற்ற ஏழாவது மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிருடன் பிழைத்திருக்கும் பல நிகழ்வுகளில் உள்ளதாகக் கூறிய தீர்ப்பாயம், தாயின் வயிற்றில் இருக்கும் சிசு கருவுற்ற ஐந்து மாதங்களில் இருந்து குழந்தைக்குச் சமமாக கருதப்படும் என்ற சுட்டிக்காட்டியது.
ஆனால், இதுபோன்ற வழக்குளில் முதல் முறையாக, 7 மாதமான கருவை குழந்தையாகக் கருதாமல், கருச்சிதைவாகவே கொள்ளவேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. பிறக்காத குழந்தையை ஒரு நபராகக் கருதலாம் என்றும் விபத்து நடக்காமல் இருந்திருந்தால் குழந்தை இந்த ஆரோக்கியமாகப் பிறந்திருக்கும் என்றும் கூறிய தீர்ப்பாயம், "கருச்சிதைவு குற்றத்திற்கு தண்டனை உள்ளது. அதனால் அடைந்த வலி, வேதனை மற்றும் இழப்புகளுக்கு இழப்பீடு பெற தாய்க்கு உரிமை உண்டு" என்று தீர்ப்பாயம் எடுத்துரைத்தது.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் அனுபவித்த வலி மற்றும் வேதனைகளுக்கான இழப்பீடாக ரூ.2 லட்சமும், பொருள் இழப்புகளுக்கான இழப்பீடாக ரூ.1 லட்சமும், குழந்தையை இழந்ததால் கிடைக்காமல் போன மகிழ்ச்சிக்கான இழப்பீடுக்காக ரூ.3 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.