இரட்டை இலை வழக்கில் டி.டி.வி. தினகரனின் இடைத்தரகரான சுகேஷ் சந்திராவுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நடிகை லீனா மரியா பாலின் பியூட்டி பார்லருக்குள் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் லீனா மரியா பால். இவர் மோகன்லாலின்’ரெட் சில்லீஸ்’ மற்றும்’ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா’ உட்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ’மெட்ராஸ் கபே’ என்ற இந்தி படத்திலும், தமிழில் ‘பிரியாணி’ படத்திலும்  நடித்துள்ளார்.

 இவர் கொச்சி பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சென்னை கனரா வங்கியில் 18 கோடி மோசடி செய்ததாக, இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.  இரட்டை இலைவழக்கில் தினகரனின் கூட்டாளி என்று கூறப்படும் சுகேஷ் சந்திரசேகருடன் ஒரு கட்டத்தில் மிக நெருக்கமானவராகவும் இருந்திருக்கிறார் லீனா. 

இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர், இவரது பியூட்டி பார்லரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் அலறி ஓடினர். சுட்டுவிட்டு உடனடியாக இருவரும் பைக்கில் தப்பினர். சம்பவத்தின்போது லீனா கடையில் இல்லை. பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை தாதாவான ரவி புஜாரா என்பவர் லீனாவுக்கு போன் செய்து 25 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கொச்சி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடிகையை கொல்ல, இந்த கும்பல் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பியூட்டி பார்லர் அருகே கிடந்த பேப்பரில் ரவி புஜாரா குறித்த தகவல்கள் இருந்தன. அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.