புதுக்கோட்டையில் நிலத்தகராறு காரணமாக தந்தை மற்றம் மகன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(70) . இவரது மகன் முத்து (30).வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. முத்து விவசாயம் செய்து வந்தார். இவர்கள்  10 வருடங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி மூலமாக நிலத்தை வாங்கி உள்ளனர். 

இந்நிலையில் திடீரென அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிக்காக எடுத்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை-மகன் இருவரும் மூர்த்தியிடம் சென்று முறையிட்டனர். நீங்கள் கூறியதன் பேரில் தானே அந்த நிலத்தை வாங்கினோம். ஒன்றே கால் கோடி ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு கூறிவந்துள்ளனர். 

ஆனால் மூர்த்தி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தனது தோட்டத்திற்கு வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார். இதையடுத்து வீராச்சாமி, முத்து மற்றும் உறவினர்கள் இன்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றனர். 
 
அங்கு வாய் தகராறு ஏற்பட்டு முற்றிய போது, மறைந்திருந்த கும்பல் நான்கு பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து வீராசாமி, முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.