ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரை அடுத்த எல்லாருபைலு கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். விவசாயி. இவரது மனைவி லீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அந்த கிராமத்தில்  முனிரத்தினத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக பருவ மழை பொய்த்து போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் முனிரத்தினம் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நச்சரித்தனர்.
இதில் மனவேதனை அடைந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இரவில் குழந்தைகளுக்கு  உணவு கொடுத்து தூங்க வைத்து விட்டு இருவரும் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கினர்.

இன்று காலை சரிந்து கிடந்த முனிரத்தினம்- லீலாவதி ஆகிய இருவரையும்  பிள்ளைகள் பெற்றோரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் எழுந்திரிக்கவில்லை. அவர்கள் அருகில் இருந்த பூச்சிகொல்லி பாட்டிலை பார்த்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெற்றோரின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இவர்களின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து கண்கலங்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த புங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாயி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தி அறிந்த மதனபல்லி உதவி கலெக்டர் கீர்த்தி கணவன்- மனைவி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவர் ஆந்திர முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்த விவசாயின் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு ரூ.5 லட்சம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டு கொண்டார். முதல்வரும் ரூ.5 லட்சம் தருவதாக உறுதியளித்துள்ளார்.