மருத்துவ படிப்பில் சேருவதற்காக ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சென்னை மாணவனுக்கு பல லட்சம் ரூபாய் கைமாறியதாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உதித் சூர்யாவின் தந்தையின் ஹிஸ்டரியை தோண்டிப்பார்த்தாலும் பல உண்மைகள் தெரியவந்துள்ளது.

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மாணவர் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யாவை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை  அமைத்து சென்னையில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். ஆனால், அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவருடைய  சொந்தக்காரர்கள் வீடுகளிலும் போலீசார் தேடி  வருகின்றனர்.

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆள்மாறாட்ட சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக இந்த தகவல் அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு இமெயில் மூலம் அளித்த புகாரின் பேரில் வெளியே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இமெயில் அனுப்பிய அசோக் கிருஷ்ணன் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவருக்கு எப்படி இந்த விவரம் தெரியவந்தது? அவர் ஏன் புகார் செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதனால், அசோக் கிருஷ்ணன் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியை வைத்து, போலீசார் அந்த இமெயில் எங்கு இருந்து அனுப்பப்பட்டது? என்றும், அனுப்பியவர் குறித்த தகவல்களையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.உதித்சூர்யா கல்லூரியில் படித்தபோது சக மாணவர்களிடம், தான் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரத்தை உளறியதாகவும், தன்னுடன் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் பேரில் உதித் சூர்யா தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அவருடன் அறையில் இருந்த சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

* உதித் சூர்யா மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளார். 

* அந்த தேர்வு மையத்தில் அவருடன் சேர்ந்து மேலும் பலர் பயிற்சி பெற்று தேர்வு எழுதியுள்ளனர். 

ஆள்மாறாட்டம் செய்வதற்கு பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

முதல்கட்டமாக மும்பை பயிற்சி மையத்துக்கும் தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அடுத்ததாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு பல லட்சம் ரூபாய் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பயிற்சி மையம், சம்பந்தப்பட்ட தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் முதற்கொண்டு பலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் சம்பந்தப்பட்ட தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விவரங்களை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர்.

அதேபோல், தேர்வு முடிந்த பின்னர் நடந்த கலந்தாய்வில் உதித் சூர்யா தான் பங்கேற்றாரா? அல்லது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட நபர் பங்கேற்றாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதித்சூர்யா கலந்தாய்வில் பங்கேற்று இருந்தால் கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் ஹால்டிக்கெட்டில் உள்ள போட்டோவுக்கு, உதித்சூர்யாவுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவில்லையா? அல்லது, கலந்தாய்வில் உதித் சூர்யா பங்கேற்காத பட்சத்தில் அவருடைய சான்றிதழ், அடையாள ஆவணங்கள் சரிபார்ப்பு பணியின் போது கோட்டை விட்டது ஏன்? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

பலர் ஆள்மாறாட்டம் செய்து இருக்கலாம் என்று தகவல்கள் கூறப்பட்டு உள்ள நிலையில், மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது.