ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வங்காபுரம் ஊரை சேர்ந்தவர் தனிக்கொடி (55). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (50). இவரும் கணவருக்கு உதவியாக விவசாய வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் தீபாவளியையொட்டி தனிக்கொடிக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஆனால், கணவரை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். பின்னர் இருவரும் வீட்டிற்குள் தூங்க சென்று விட்டனர்.

இந்நிலையில், அதிகாலை 3 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த தனிக்கொடி, காய்ச்சலால் அவதிப்பட்ட தன்னை மனைவி கவனிக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், வெளியில் கிடந்த கருங்கல்லை தூக்கி மனைவி தலையில் போட்டுள்ளார். இதில், மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து,  அங்கிருந்து கணவர் தப்பி சென்றுவிட்டார். தாய் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய தனிக்கொடியை தேடி வருகின்றனர்.