சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக்கடையில்  போலி பத்திரிக்கையாளர் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் அந்தக் கடையின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்த விவகாரம் நடைபெற்று இரண்டு வாரங்களைக் கடந்தும், சரவணா ஸ்டோர்ஸ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்  சில வாடிக்கையாளர்கள். காரணம் அந்த போலிப் பத்திரிக்கையாளரிடம் முன்பே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் 15 லட்சம் ரூபாயை கொடுத்து ஏன் மறைக்கப் பார்த்தது என்கிற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

 

சென்னையில், சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட புகாரில் போலி நிருபர், 5 வழக்கறிஞர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில், மிரட்டிய நபர்களுக்கு பணத்தை வாரி வழங்கியதன் மூலம், சரவணா ஸ்டோர்ஸில் முறைகேடு நடக்கிறதா என்ற சந்தேகத்தை நடுநிலையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

தனியார் பத்திரிகை நிறுவனத்தில், சில காலத்திற்கு முன் வரை பொறுப்பில் இருந்த தனசேகர், போலியான நகை குறித்து மீடியாவில் தகவல் பரப்பில், அசிங்கப்படுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருக்க ஊழியர்களிடம் 15 லட்ச ரூபாய், தனசேகரன் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்களும் தனசேகரின் மிரட்டலுக்கு பணிந்து ரூ.15 லட்சத்தை உடனடியாக அவருக்கு கொடுத்துள்ளனர்.

அதன் பிறகு அவ்வப்போது சிலருடன் சென்று, எலைட் சரவணா ஸ்டோர் நகைக்கடையில் ஊழியர்களை பலமுறை மிரட்டியதாகவும் தெரிகிறது. அடுத்து 15 நபர்களை அழைத்துக்கொண்டு தி. நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் நகை கடைக்கு சென்றுள்ளார். போலி நகை பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு மேலும் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என  மிரட்டியதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணா ஸ்டோர் எலைட் தங்க நகைக்கடையின் சார்பில் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், நகைக்கடை ஊழியர்களை மிரட்டி பணம் பறித்த கும்பலை கைது செய்வதில் ஆர்வமும் அவசரமும் காட்டிய போலீசார், ஏற்கனவே சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் எதற்காக முன்பு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கவில்லை. பணம் கொடுத்தது உண்மை என்றால், நகை போலியாக இருந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்வதாக, நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகைகளின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அத்துடன், போலி நகை பற்றி வெளியே சொல்வேன் என்று சொன்னவர்களை பணம் கொடுத்து சரிகட்ட வேண்டிய அவசியம் என்ன? இப்போது போலீசிற்கு சென்ற சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம், முன்பு 15 லட்சம் கொடுத்த போது, போலீசில் புகார் அளிக்காதது ஏன்?  என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இதற்கும் காவல்துறை விடை கண்டறிய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஊடகச்சங்கத்தில் இருந்து முன்பே தனசேகரன் நீக்கப்பட்டதற்கான கடிதம் இது. தனசேகர் தான் போலியே தவிர; சங்கம் அல்ல. இதனிடையே, தனசேகரன் முன்பு பொறுப்பில் இருந்த அகில உலக பத்திரிகை ஊடகச்சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜய் ஆனந்த் கூறியதாவது, ’’புகாருக்குள்ளான தனசேகரை, கடந்த 23.09.2019இல் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டோம்.

 

எனவே, அவரது நடவடிக்கைக்கு சங்கம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அவர் போலி பத்திரிகையாளர். அதே நேரம் சங்கத்தை சில ஊடகங்கள் போலி என்று குறிப்பிடுவது கவலைக்குரியது. எங்கள் சங்கம் உண்மையானது என்பதை ஊடக நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இனியும், இந்த விவகாரத்தில் சங்கத்தை போலி என்று குறிப்பிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய தனசேகர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

எனவே, சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை விவகாரத்தில் மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு விற்கப்பட்டது போலி நகையா? ரூ. 15 லட்சம் கொடுத்து சரிகட்ட நினைத்தது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கும் போலீசார் விடை கண்டறிய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.