விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் பால்ராஜ்(67). இவரது மனைவி செல்வி. கம்பவுண்டரான இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டிக்கு குடும்பத்துடன் பால்ராஜ் குடிபெயர்ந்தார். அந்த பகுதி மக்களிடம் தன்னை மருத்துவர் என்று கூறிய பால்ராஜ், அங்கு கிளினிக் ஒன்று நடத்தி வந்தார். அவருக்கு உதவியாளராக மனைவி செல்வி இருந்துள்ளார்.

இந்தநிலையில் பால்ராஜ் போலி மருத்துவர் என்கிற தகவல் காவல்துறையினருக்கு தெரிய வரவே, அவரை அதிரடியாக கைது செய்தனர். விடுதலை ஆகியிருந்த பால்ராஜ், மீண்டும் மருத்துவம் பார்க்கவே கடந்த 2018ம் ஆண்டு அவரையும் அவரது மனைவி செல்வியையும் இரண்டாம் முறையாக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து கிளினிக்கில் பால்ராஜ் பணியில் இருந்துள்ளார். இன்று அதிகாலையில் கிளினிக்கில் விளக்கு எரிவதை பால்ராஜின் வீட்டு உரிமையாளர் பார்த்துள்ளார்.

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

இதனால் அங்கு சென்று அவர் பார்த்த போது, பால்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவலர்கள் பால்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலைவழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கிற ரீதியில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.