அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பதாக என பொய் சொல்லி, வசதியான வீட்டுப் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்த இளைஞர், வரவேற்பு நிகழ்ச்சியின் போது, தனது குடிகார மாமனால் வசமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

வில்லிவாக்கம் வெங்கடேசன் நகரில் வசித்து வந்தவர் கார்த்திக். அன்றாடம் காலை ஸ்டெத்தஸ்கோப்பையும், வெள்ளை அங்கியையும்  எடுத்துக் கொண்டு தனது சொகுசு காரில் புறப்பட்டுச் செல்வதை கார்த்திக் வாடிக்கையாக வைத்திருந்ததாகக் சொல்லப்படுகிறது. அரசுப் வேலை என்பதைக் குறிக்கும் ஜி என்ற எழுத்து, அவரது சொகுசு காரில் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்து, கார்த்திக்கை ஒரு அரசு டாக்டர் என்று அப்பகுதி மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர்.

அதேபகுதியில் உள்ள வசதியான ஒரு குடும்பத்தினரும் அப்படியே நினைத்துக்கொண்டிருக்க. கார்த்திக்கின் நடத்தை பிடித்துப் போகவே, தங்கள் வீட்டுப் பெண்ணை கார்த்திக்கிற்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசுவதற்காக கார்த்திக்கை நேரில் சந்தித்து அவரது குடும்ப பின்புலம் பற்றி விசாரிக்கையில், தனக்கு அப்பா, அம்மா  இல்லை என்று சொன்னதாகவும் உறவினர்கள் மட்டுமே இருப்பதாகவும், அரசு மருத்துவமனை ஒன்றில் தாம் டாக்டராக வேலைபார்ப்பதாக சொல்லியுள்ளார்.

இதை அடுத்து கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் கல்யாணம்  நடைபெற்றது. வியாழக்கிழமை அன்று ரெட்டேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தது.இதுவரைக்கு நன்றாக  நடந்துகொண்டிருந்தது, நன்றாக முடிந்தது என  கார்த்திக்கும், அவருக்கு பெண் கொடுத்தோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த போது, வரவேற்பு நிகழ்ச்சிக்கு சரக்கு அருந்தி விட்டு சலம்பிய படி வந்த கார்த்திக்கின் மாமாவால் பூகம்பம் வெடித்ததுள்ளது. அதாவது, வரதட்சனை பணம் தொடர்பாக பெண் வீட்டாரிடம் கார்த்திக்கின் மாமா வாக்குவாதம் செய்த போது, மதுபோதையின் உச்சத்தில் இருந்த அவர் அவர்களுடன் உண்மையை போட்டுடைத்தார்.

கார்த்திக்கே ஒரு பிச்சைக்காரன் என்று அவர் கூறியதைக் கேட்டு பெண் வீட்டார் அதிர்ந்து போயினர். என்னவென்று விசாரிக்கத் தொடங்கிய போது கார்த்திக்கின் வாய் குளறத் தொடங்கியது. இதனால், ஒட்டுமொத்த கூட்டமும் கார்த்திக்கை நோக்கி படையெடுத்தது. செம்ம காட்டு கட்டிவிட்டனர் பெண் வீட்டார், அதோடு விடாமல் மணக்கோலத்தில் ஸ்டைலாக இருந்த கார்த்திக்கை மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர்.

கார்த்திக்கைக் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட போது, அவரது சொந்த ஊர் கோவை என்பதும், உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு திருமணத்திற்கு வந்த பெரும்பாலானோர் போலிகள் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் வந்த கார்த்திக், அங்கு தன்னை அரசு டாக்டர் போல் காட்டிக் கொண்டு வசதியான வீட்டுப் பெண்ணை கல்யாணம் முடிக்க திட்டம் போட்டதும் அம்பலமானது. எனவே கார்த்திக் இதற்கு முன்பு வேறு யாரையாவது ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா? அல்லது வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளாரா? என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் உண்மையான பெயர்  சாம்சுந்தர் என்பதையும் இந்த டூப்ளிகேட் டாக்டர் சாம்சுந்தருக்கு உடந்தையாக இருந்த வசந்தா என்ற பெண்ணையும், அவரது கணவர் ரவி மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.