நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்த முகம்மது, கடந்த சில நாட்களுக்கு முன் கல்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மாட்டுக்கறி சூப் குடித்துள்ளார். சூப் குடிப்பதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு விட்டார். அதனுடன், ஆயிரம் தான் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா என்ற வாசகத்தையும் போட்டுவிட்டார். வீட்டுக்கு சென்றுவிட்டார்.

முகம்மது பீஃப் சூப் குடிக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சியான அவரது பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தினேஷ் குமார் என்பவர் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கும்பல் கத்தி, இரும்பு இரும்பு கம்பியுடன் முகம்மது வீட்டிற்குள் நுழைந்து  முகம்மதுவை கத்தியாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாக தாக்கினர். இதில் முகம்மது படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.வெறித்தனமாக தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உயிருக்கு போராடிய முகம்மதுவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ்  முகமதுவை தாக்கிய தினேஷ்குமார், கணேஷ் குமார், மோகன் குமார், அகஸ்தியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதை தவிர வேறு சிலரும் தலைமறைவாக உள்ளதால், அவர்களை தேடி வருகிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டால் வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த தாக்குதல்கள், இப்போது நம்ம ஊரிலும் நுழைந்துவிட்டது தமிழக மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அருள் ரத்தினம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில்; மாமிசமும் மதவெறுப்பும் எனக்கு பிடிக்காத மாமிசத்தை நீ உண்ணலாம். உனக்கு பிடிக்காத மாமிசத்தை நான் உண்ணலாம். ஆனால், உனக்கு பிடிக்காத மாமிசத்தை நானும், எனக்கு பிடிக்காத மாமிசத்தை நீயும் பொதுவெளியில் விளம்பரம் செய்வதும், அதற்காக திருவிழாக்களை நடத்துவதும் வீண் வம்புகளை உருவாக்கும் செயல்கள் அன்றி வேறில்லை.

உணவு பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. இன்றைக்கும் பெரும்பாலான திருமண மண்டபங்களில் 'அசைவ உணவை' வழங்க முடியாது. பெரும்பாலான பெருந்தெய்வ இந்து வழிபாட்டு முறைகளில் எந்த மாமிசமும் அனுமதிக்கப்படுவது இல்லை. பெரிய கோவில்கள் உள்ள ஊர்களில் கோவில் தெருக்களில் அசைவ உணவு விடுதிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. பல வாடகை வீடுகள் அசைவ உணவுக்கு அனுமதி இல்லை' என்று அறிவிப்புடன் உள்ளன. தமிழ்நாட்டின் 99% அசைவ உணவு விடுதிகளில் 'சில மாமிசங்கள்' வலுக்காட்டாயமாக தவிர்க்கப் படுகிறது.

இதையெல்லாம் 'இன ஒதுக்கல்' என்று அழைக்க முடியுமா? இதையெல்லாம் வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் மாற்றி விடுவீர்களா?

'அவரவர் உணவு; அவரவர் விருப்பம்' என்பது தான் நியாயம்! (அதிலும் கூட தடை செய்யப்பட்ட மான் கறி போன்றவற்றுக்கு அனுமதி இல்லை)

தமிழ்நாட்டினை மதவெறி மோதல்களுக்கான களமாக மாற்றுவதற்காக கடுமையாக உழைக்கும் 'முற்போக்கு + பகுத்தறிவு + சாதிஒழிப்பு' அமைப்புகளும், அதற்கு துணை போகும் 'சிறுபான்மை நண்பர்களும்' அவர்களது 'மதக்கலவரங்களை தூண்டும் முயற்சியில்' வெற்றி அடைவார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆனால், தமிழகம்தான் படுதோல்வி அடையும்; பின்னோக்கி செல்லும்; பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்பதே ஒரே கவலை!