முகநூல் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்ற தாயை கூலிப்படையை ஏவிக் கொலை செய்த கல்லூரி மாணவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமுருகன் நாதன்(55). இவரது மனைவி பானுமதி(50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி(24), தேவிப்பிரியா(19) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், தேவிப்பிரியா ஆவடி இந்து தனியார் கல்லூரியில்  பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கையில் புத்தகம் இருக்கிறோதோ இல்லையோ ஆனால் தேவிப்பிரியா கையில் செல்போன் எப்போதும் இருக்கும். தினமும் முகநூலில் பலமணி நேரம் சாட்டிங்கில் மூழ்கி உள்ளார். 

இந்நிலையில், தேவிப்பிரியாவுக்கு முகநூலில் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புவனம் பகுதியை சேர்ந்த விவேக்(18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.  இந்த முகநூல் காதலுக்கு தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால், தேவிப்பிரியா தனது முகநூல் காதலன் விவேக்கை தொடர்புகொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு செல்போனில் தொடர்பு கொண்டார்.  இதையடுத்து, விவேக், தனது நண்பர்களான திருவிடைமருதூர் அடுத்த கோட்டூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்(18), திருபுவனம் கன்னித்தோப்பு தெருவை சேர்ந்த விக்னேஷ்(18) ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். 

இதனையடுத்து விவேக்கின் நண்பர்கள் சென்னை விரைந்தனர். பின்னர் சதீஷ், விக்னேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று மாலை புட்லூர் ரயில் நிலையம் வந்தனர். அவர்களை தனது வீட்டுக்கு தேவிப்பிரியா அழைத்துவந்து, வீட்டின் வெளியே நிற்குமாறு கூறிவிட்டு, அவர் மட்டும் வீட்டுக்குள் சென்றார். தனக்கு தேவையான துணிகளை பையில் எடுத்டது வைக்கும் போது அதை அவரது தாயார் பார்த்துவிட்டார். உடனே மகளை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தடுத்துள்ளார். 

இதனையடுத்து ஆத்திரமடைந்த தேவிப்பிரியா காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் தாய் பானுமதியை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் நிலைக்குலைந்து போன தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியாக பானுமதியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.