20 வயது இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியியை சேர்ந்தவர் 20 வயது நிரம்பிய இளைஞர் நிர்மல் குமாவத். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மலுக்கும் அவருடைய காதலிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சிறிய சண்டை நடந்துள்ளது.
 
இதனால் மனம் உடைந்த நிர்மல் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் வரை லைவ் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில் ‘எனது காதலி எனக்கு துரோகம் செய்து விட்டார். ஆகையால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என கூறி இருந்தார். ஆனால் அந்த நேரடி வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த இணையவாசிகள், தற்கொலையை தடுக்க முயற்சிக்கவில்லை. காவல்துறைக்கும் தகவல் அளிக்கவில்லை. மாறாக, அந்த வீடியோவுக்கு லைக் மற்றும் கமெண்டுகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் வைத்திருந்த மாத்திரைகளை நிர்மல் சாப்பிட்டுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கயிறு மூலம் தனது அறையில் தூக்கிட்டு கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்மல் குமாவத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலின் உடலினை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.