காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் தருமபுரி இளவரசனின் மரணம், கொலையா, தற்கொலையே என்று நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அளித்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் ப்ரண்ட்லைன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த இளைஞர் இளவரசன், அப்பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்துக்கு அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. அந்த நேரத்தில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டதால், குறிப்பிட்ட இரண்டு சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. பட்டியலின மக்கள் வசித்துவந்த மூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், தனது தாயுடன் செல்ல விரும்புவதாகக் கூறினார் திவ்யா.

திவ்யா தனது வீட்டுக்குச் சென்ற அடுத்த நாள் மனம் உடைந்த இளவரசன் மரணம் நடந்தது. 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதியன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. 

இளவரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் சந்தேகத்தால், இளவரசனின் மரணம் செயற்கை மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இளவரசன் உயிரிழந்திருந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற கோவை - மும்பை குர்லா விரைவு ரயிலின் ஓட்டுநரிடம், விசாரணை நடத்துவது, இளவரசன் மரணம் அடைந்திருப்பதில் உள்ள மர்மத்தை விலக்கும் என்று சொல்லப்பட்டது. மேலும், இளவரசனின் செல்போனை வைத்து, இறப்பதற்கு முன்பு, அவரது கைபேசி எங்கெல்லாம் இருந்துள்ளது என்பதை டவர் மூலம் கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இளவரசனின் உயிரற்ற உடல் இருந்த இடத்தை தர்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11.30 மணிக்கு கடந்து சென்றுள்ளது. பிரேத பரிசோதனையின் அறிக்கைப்படி 12 - 1 மணிக்குள் தான் உயிர் பிரிந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லில் அடுத்த ரயில்வண்டியான குர்லா எக்ஸ்பிரஸ் 1.30 மணிக்கு சென்றுள்ளது. குர்லா ரயில்வண்டியின் ஓட்டுனர் விசாரணையில் கூறும்போது, தான் ஒரு உயிரற்ற சடலத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.முதல் வண்டி - 11.30 மணி,உயிர் பிரிந்த நேரம் - 12 - 1 மணிக்குள் (பிரேதப் பரிசோதனை அறிக்கை) அடுத்த வண்டி - 1.30மணி. இந்தத் தகவலை மரணமடைந்த இளவரசனின் உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இளவரசனின் அவரின் மரணம் அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில்,  அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இளவரசனின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஆணையம் அமைத்தார். இந்த ஆணையம் இளவரசன் மரணம் குறித்துப் பலரிடம் விசாரணை செய்து அறிக்கை தயார் செய்தது.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது சிங்காரவேலு ஆணையம். இதுவரை இந்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதநிலையில், இது பற்றி ப்ரண்ட்லைன் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மனைவி திவ்யா பிரிந்து சென்ற விரக்தியில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டது எனது விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று நீதிபதி சிங்காரவேலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இளவரசனின் உடலை இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்தனர். அவர்களது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், தடயவியல் சோதனைத் தரவுகள், இளவரசன் எழுதிய கடிதம் இவற்றை ஆதாரமாகக்கொண்டு ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் ரயிலிலிருந்து இளவரசன் கீழே விழுந்து மரணமடைந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அவரது உடலில் வேறெந்த வகையிலும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளவரசனின் உடலில் எந்த நச்சும் இல்லை என்றும், சிறிதளவு எத்தில் ஆல்கஹாலை அவர் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளவரசனின் கையெழுத்து அந்தக் கடிதத்தில் இருப்பதை சென்னை தடயவியல் துறை ஆய்வகம் உறுதி செய்துள்ளது. சென்னையிலிருந்து திரும்பிய இளவரசன் மனமுடைந்து இருந்தார் என்பதை அவரது நண்பர்களின் வாக்குமூலங்கள் உறுதி செய்துள்ளது என்றும், இளவரசனின் வாட்ச் 1.20க்கு நின்று போன போது குர்லா எக்ஸ்பிரஸ் அந்த பகுதியைக் கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது என்றும் சிங்காரவேலு ஆணையம் தெரிவித்துள்ளது.