திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடிகுண்டு... 2வது மனைவியாக மறுத்த பெண்ணை பழிவாங்கிய இளைஞர்
தனக்கு இரண்டாவது மனைவியாக மறுத்து மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணை பழிவாங்க ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்து பரிசாக வழங்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் ஹோம்-தியேட்டர் வெடித்தில் மணமகனும் அவரது சகோதரரும் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் ரெங்ககர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமேந்திரா மராவி. இவர் அண்மையில் தனது திருமணத்தில் பரிசாகக் கிடைத்த ஹோம் தியேட்டரை வீட்டில் பொருத்தியபோது அது வெடித்துச் சிதறியது. இதில் ஹேமேந்திராவும் அவரது சகோதரர் ராஜ்குமாரும் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் 33 வயதாகும் சர்ஜு மார்க்கம் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதை அடையாளம் கண்டனர். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கபீர்தாமில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பலாகட்டில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பலியான ஹேமேந்திராவை மணந்த பெண்ணுடன் மார்க்கம் உறவில் இருந்ததாகவும், அந்தப் பெண்ணைத் தன் இரண்டாவது மனைவியாக அடைய விரும்பியதாவும் பொலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதும்பற்றி எதுவும் தெரியாத பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் பெண்ணுக்கு ஹேமேந்திராவுடன் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மார்க்கம் அந்தப் பெண்ணை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஒரு ஹோம்-தியேட்டரை வாங்கி அதன் ஸ்பீக்கர்களுக்குள் 2 கிலோ வெடிமருந்துகளை அடைத்து, அதற்கு மின் இணைப்பை வழங்கினால் வெடிக்கும் வகையில் தயாரித்துள்ளார். மார்க்கம் இந்தூரில் உள்ள ஆலை ஒன்றில் வெடிகுண்டு துறையில் பணிபுரிந்தவர் என்பதால் அவருக்கு வெடிமருந்துகளைக் கையாளவது பற்றியும் வெடிகுண்டை மற்ற பொருட்களுடன் இணைப்பது பற்றியும் நன்றாகத் தெரிந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற ஹேமேந்திராவின் திருமணத்திற்குச் சென்ற மார்க்கம், தன் அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் குடும்ப உறுப்பினர்களிடம் பரிசை வழங்கிவிட்டு, அமைதியாக வெளியேறி வந்துவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை பரிசைத் திறந்து பார்த்துள்ளனர். பரிசுப் பெட்டியில் பெயர் அல்லது முகவரி இல்லை என்றாலும், ஹோம் தியேட்டர் பரிசாகக் கிடைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹேமேந்திரா அதை பயன்படுத்திப் பார்க்க முயன்றபோது அது வெடித்துச் சிதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடக்கின்றன. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பணிநீக்கம் செய்யப்பட்ட அஞ்சல் ஊழியர் ஒருவர் ஒரு ரேடியோ வெடிகுண்டை கூரியர் செய்தார். அது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள் சாகரில் வெடித்துச் சிதறது. அடுத்த மாதம், பார்சல் வெடிகுண்டு அனுப்பியதற்காக முன்னாள் கல்லூரி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அனுப்பிய பார்சல் வெடிகுண்டு வெடித்ததில் ஒடிசா மாநிலம் பட்நகரில் ஒரு மணமகனும் அவரது பாட்டியும் பலியானார்கள்.