ஈரோடு அருகே கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்நியூர் அருகே உள்ள பாப்பாத்திகாட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(55), இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜி(50) என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

கூலித்தொழிலாளர்களான இருவரும் கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேங்காய் பறிக்க சென்றனர். நேற்று மாலை மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பர்கூர் மலைப்பாதையில் வரட்டுபள்ளம் அணை அருகே திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விஸ்வநாதன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு விறகு கட்டையால் ராஜியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்நிலையில், ராஜி உயிரிழந்து கிடந்த நிலையில், அவரின் அருகே விஸ்வநாதன் நின்று கொண்டிருப்பதை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தனர். உடனே இதுதொடர்பாக பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, விஸ்வநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.