ஈரோடு அருகே பட்டப்பகலில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சலங்கபாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன் (45). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் இன்று காலை 7 மணியளவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். 

அப்போது காரில் வேகமாக வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பஞ்சாயத்து தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.