கோவையில் இருக்கும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்கான். அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் சமூக வலைதளம் ஒன்றில் கருப்பு குதிரை என்கிற பெயரில் தமிழக முதல்வர் குறித்தும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்தும் தரம் தாழ்ந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டு சர்ச்சையை கிளப்பி வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதிமுகவினரை மிரட்டும் வகையில் அப்பதிவுகள் இருப்பதுடன் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதாகவும் இருப்பதால் அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் சுதர்சன் என்பவர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்து சென்னை சென்ற தனிப்படை போலீசார் சுதர்சனை அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது திமுக பிரமுகர் ஒருவர் கூறியதன் பெயரிலேயே முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின்படி சுதர்சன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். சுதர்சன் கூறிய சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை கைது செய்யவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.