தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இருக்கிறது கீழ ஈரால் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாப்பா(60). இவருக்கு சொந்தமாக வயல் நிலங்களும் தோட்டமும் இருக்கிறது. தினமும் தோட்டத்திற்கு சென்று வேலை பார்ப்பது அவரது வழக்கம். சம்பவத்தன்று காலையில் தோட்டத்திற்கு பாப்பா சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்றனர். ஆளில்லாத இடம் வந்ததும் பாப்பாவை மர்ம நபர்கள் வாயை பொத்தி காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர்கள் மூதாட்டி என்றும் பாராமல் பாப்பாவை கற்பழித்துள்ளனர். பின் அங்கிருக்கும் கல்லை எடுத்து பாப்பாவின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மூதாட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டுசென்றனர். கொலை வழக்கு பதியப்பட்டு மர்மநபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது .கொலையாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.