கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் வைத்து இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் வழிபட்டனர். இதைதொடர்ந்து கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், பாலவாக்கம், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில், தென்சென்னை பகுதியில் அமைக்கப்பட்ட பல்வேறு சிலைகள் அங்கு கரைப்பதற்காக கொண்டு வரப்பட்டன. இதில், ஏராளமான வாலிபர்கள் கலந்து கும்மாளம் அடித்தனர். அப்போது, சிலர் மது அருந்தி போதையில் இருந்தனர். இதனால், அங்கு ரகளையில் ஈடுபட்டனர். இதை பார்த்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது, 2 வாலிபர்கள், போலீசாரிடம் தகராறு செய்து, திடீரென சரமாரியாக தாக்கினர்.

அப்போது போலீஸ்காரர் ஜெயகுமார் என்பவருக்கு சரமாரியான அடி விழுந்தது. இதில் அவரது தலை, கை, கால், மூக்கு என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், 2 பேரையும் கைது செய்து நீலங்கரை காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தீனா, பிரகாஷ் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் முறைப்படி விசாரித்து வருகின்றனர்.