மேட்டூரில் மது அருந்தும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 சேலம் மாவட்டம்.மேட்டூர் அம்மன் நகரை சேர்ந்தவர் கணகராஜ் மகன் ராஜா. இவர் கூலித்தொழிலாளி. இவர்  மேட்டூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் டான்சி குடியிருப்பு பகுதியில் உள்ள புதரில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் எவரும் வசிக்காத காரணத்தால் இப்பகுதி காடுபோல முட்புதர்கள் அடர்ந்து காணப்படும். இந்த பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. 

சீட்டாட்டம் விபச்சாரம் கள்ளத்தனமாக மது அருந்துவோருக்கும் இந்த பகுதி அனைத்து சொர்க்கமாக பயன்பட்டு வந்தது.இந்த நிலையில் இப்பகுதியில் ராஜா தனது நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் ராஜாவை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இன்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் சடலத்தை பார்த்துவிட்டு மேட்டூர் காவலருக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த மேட்டூர் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் மற்றும் காவலர்கள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்குள் எதற்காக மோதல் நடந்தது என்பது மர்மமாக உள்ளது. 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேட்டூர் ஐடிஐ வளாகத்தில் கேட்பாரற்று ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்திருக்கிறது.. இது கொலையாளிகள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கு ரஞ்சிதா என்ற பெண்ணுடன் 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.