மதுரை  டி.கல்லுப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் வெயில்முத்து, சுமை தூக்கும் தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வருபவர் காளீஸ்வரி. இவரின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு குடும்ப பிரச்சனைக காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெயில்முத்துவுக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வெயில்முத்து தனது வீட்டிற்கு செல்லாமல் காளீஸ்வரி வீட்டிலேயே தங்கினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வெயில்முத்து தினமும் சரக்கடித்துவிட்டு வந்து அடிக்கடி காளீஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தினமும் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17-ந் தேதி சரக்கு போதையில் வந்த வெயில்முத்து, காளீஸ்வரி பயங்கரமாக தாக்கியுள்ளார். அப்போது இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் போதையில் தவறி விழுந்த வெயில் முத்துவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக சொல்லப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி செய்வதறியாது திகைத்தார். நள்ளிரவு முழுவதும் பிணத்துடன் இருந்த அவர், கொலையை மறைக்க வெயில்முத்து உடல் மீது மண் எண்ணை ஊற்றி எரித்தார். சரியாக உடல் எரியவில்லை. இதையடுத்து அதிகாலையில் வீட்டின் முன்புறம் உள்ள குப்பை போடும் இடத்தில் குழியை தோண்டி அரைகுறையாக எரிந்த வெயில்முத்து உடலை புதைத்தார்.

இந்நிலையில் இன்று காலை அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதனால் அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காளீஸ்வரி டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வெயில் முத்து உடலை வாங்க மறுத்து அவரது தந்தை கருப்பணன் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் போராட்டம் செய்தனர். அப்போது காளீஸ்வரி மட்டும் இந்த கொலையை செய்திருக்க முடியாது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக சிலர் உள்ளனர் என சந்தேகம் தெரிவித்தனர்.