தங்கைக்கு போன் செய்து குடிக்க பணம் தரும்படியும் இல்லையென்றால் நான் செத்து உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என கூறியுள்ளார் அண்ணன்.
குடிக்க பணம் வேண்டும் :
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர் சேனையர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்து செல்வகுமார் (வயது 25), இவரது தந்தை மாரியப்பன் இறந்துவிட்டார். முத்து செல்வகுமார் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிக்கும் பழக்கம் இருப்பதால் தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை முத்து செல்வக்குமாரின் சகோதரன் பாலமுருகன், தாய் மற்றும் உறவினர்களும் பாலமுருகன் தங்கை திருமண விஷயமாக நெல்லைக்கு புறப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் இல்லை என கூறிவிட்டு திருமண விஷயமாக வெளியே சென்றுவிட்டனர். இந்நிலையில் அவரது தங்கை மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் மாலையில் முத்து செல்வகுமார் வீட்டுக்கு வந்துள்ளார்.
தற்கொலை செய்த குடிகார அண்ணன் :
அப்போது மாடியில் இருந்து கொண்டு தனது தங்கைக்கு போன் செய்து குடிக்க பணம் தரும்படியும் இல்லையென்றால் நான் செத்து உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என கூறியுள்ளார். இதை கண்டுகொள்ளாத தங்கை பின் அண்ணன் மீது உள்ள பாசத்தால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாடிக்கு சென்று அறை கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறக்காத நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர்.

மாடியில் உள்ள அறையில் பேன் மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலையை அறுத்து வாலிபர் செல்வகுமாரை இறக்கிப் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அண்ணன் பாலமுருகன் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக ஆத்தூர் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் உடலைக் கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
