சென்னை வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (30). அப்பகுதியில் தாதாவாக வலம் வருகிறார். நேற்று இரவு ஜெகதீஷ், எஸ்ஏ காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் (கடை எண்9) மது அருந்தினார். பார் மூடிய பிறகும், அங்கு குடித்து கொண்டிருந்தார். இதை தட்டிக்கேட்ட பார் ஊழியர்களுடன் தகராறு செய்தபோது, அவரை சமாதானம் செய்து வெளியே அனுப்பிவிட்டு, பாரை பூட்டினர். பின்னர் வெளியே வந்த அவர், சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். 

அப்போது, அவ்வழியாக வந்த எம்கேபி நகர் சிறப்பு எஸ்ஐ நாகதாஸ், அவரை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஜெகதீன், சிறப்பு எஸ்ஐ நாகதாசை சரமாரியாக தாக்கியதுடன், அவரிடம் இருந்தவாக்கி டாக்கியை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்தார். இதை பார்த்த பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், ஜெகதீஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். 

இதையடுத்து படுகாயமடைந்த சிறப்பு எஸ்ஐ நாகதாசை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பினார். இதற்கிடையில் போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த ஜெகதீஷை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு டியூட்டி மாறிய அனைத்து போலீசாரும், அவரை ஊறப்போட்டு காய வைத்தனர்.