மதுபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த ஓட்டுநரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நடைபெற்ற கொலை தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருமஞ்சிறை சின்னசெங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது51). தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய மகன் விஷால் (19). தர்மராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தர்மராஜ் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் ஒன்று இருந்துள்ளது.
இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தர்ம ராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய மகன் விஷால் அங்கு வந்தார். அப்போது தர்ம ராஜ் தனது மகனிடம் “காரின் பெயரை ஏன் உன்னுடைய பெயருக்கு மாற்றினாய்? அப்படி என்றால் நீ உழைக்கும் பணத்தை என்ன செய்தாய்?” என்று கேட்டுள்ளார். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி
இதனால் ஆத்திரம் அடைந்த விஷால் தனது உறவினர் சதிஷ்குமார் (26) என்பவருடன் சேர்ந்து மண்வெட்டியால் தர்மராஜின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் தர்மராஜ் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் தர்மராஜின் தங்கை தன லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு வந்து பார்த்தார். அப்போது தலையில் படுகாயம் அடைந்து கிடந்த தர்மராஜை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று தர்மராஜ் உயிரிழந்தார்.
எஸ்.பி.வேலுமணி இல்லையென்றால் வானதி காணாமல் போய்விடுவார் - ஆளுநர் பேச்சு
இது தொடர்பாக தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விஷால் மற்றும் சதிஷ்குமார் இருவரையும் கைது செய்தனர்.