பாமக நிறுவனர் டாகடர் ராமதாஸை பொள்ளாச்சி மேட்டர் ரொம்பவே சூடாக்கியிருக்கிறது. தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக  காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது  என டிவிட் போட்டுள்ளார். 

பொள்ளாச்சி பாலியல்  வன்கொடுமை செய்தி நாட்டையே கதிகலங்க வைத்திருக்கிறது.  பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட இந்த டீம் கடந்த 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த  இந்த கும்பலிடமிருந்து 1500 ஆபாச வீடியோக்களை கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு பின் அரசியல் புள்ளிகள் இருப்பதாகவும்,  போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரும் வைக்கப்பட்டு இருக்கிறது.  

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அடுத்த டீவீட்டில்; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை! என பதிவிட்டுள்ளார்.