வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்திய மருத்துவ கணவர்.. எலி மருந்து குடித்து அரசு பெண் மருத்துவர் தற்கொலை.!
அடிக்கடி சுகந்தா அவரது தாயார் சரஸ்வதிக்கு போன் செய்து தன்னை கணவர் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகந்தா கடந்த 8-ம் தேதி தனது கணவர் கொடுமை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டதும் மயங்கினார். இதனையடுத்து, அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே பெண் மருத்துவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மருத்துவரான அவரது கணவர் 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுகந்தா (31). இவர் தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். சுகந்தாவுக்கும் ராமநாதபுரம் அருகே சடையன்வலசையைச் சேர்ந்த மருத்துவர் மகேஸ்வரனுக்கும் 2019-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. மகேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி படித்து வருகிறார். அதனால் சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கடந்த மாதம் ராமநாதபுரம் திரும்பி வந்து பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், அடிக்கடி சுகந்தா அவரது தாயார் சரஸ்வதிக்கு போன் செய்து தன்னை கணவர் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகந்தா கடந்த 8-ம் தேதி தனது கணவர் கொடுமை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டதும் மயங்கினார். இதனையடுத்து, அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுகந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, சுகந்தாவின் தாயார் சரஸ்வதி, தனது மகளை மகேஸ்வரன் கொடுமைப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் தற் கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவர் மகேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு சுகந்தாவின் தாய் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து மருத்துவர் மகேஸ்வரனை ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.