கரூரில் சமூக ஆர்வலர் மற்றும் அவரது தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் சரணடைந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக பெருமாள், பிரபாகரன், கவியரசன், சண்முகம், சசிகுமார், ஸ்டாலின் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி உள்ள 40 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தை அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பூ வியாபாரியான நல்லதம்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அண்மையில் உத்தரவிட்டது.

 

இந்நிலையில், கடந்த 2 நாட்கள் முன்னர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று குளத்தை அளவீடு செய்துள்ளனர். அப்போது, நல்லதம்பியும் அவரது தந்தை வீரமலையும் ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய்த்துறையினருக்கு அடையாளம் காட்டி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நல்லதம்பி தனது வயலுக்கு பூ பறிக்க சென்றுள்ளார். பூ பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்ப வந்துக்கொண்டிருந்த போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இந்த தாக்குதலில் நல்லதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் தீராத அந்த கும்பல் நல்லதம்பியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை வீரமலையையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இரட்டை கொலை தொடர்பாக பெருமாள், பிரபாகரன், கவியரசன், சண்முகம், சசிகுமார், ஸ்டாலின் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.