தூத்துக்குடியில் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 14 ரவுடிகள் அதிரடியாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டி கடந்த 26-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த தாத்தா, பேரனும் நள்ளிரவில் மர்மகும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். 

அப்போது ரவுடிகள் ஒருவீட்டில் தங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தச்சநல்லூரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்ற ரவுடிகள் சுற்றிவளைக்கப்பட்டு கண்ணபிரான், குமுளி ராஜ்குமார், எஸ்டேட் மணி உள்ளிட்ட 14 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 அரிவாள்கள், 9 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 14 பேரில், தமிழக தேவேந்திர மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார், தேவேந்திர குலகூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் கண்ணபிரான், பிரபல ரவுடி எஸ்டேட் மணி உட்பட 14 பேரும் அடங்குவர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.