பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக பொமேரியன் நாயை அதன் உரிமையாளர் துரத்தி விட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த சாகாய் பகுதியில் பொமேரியன் வகை வளர்ப்பு நாய் ஒன்று ஆதரவற்ற நிலையில் திரிந்துகொண்டு இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து அங்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன், அந்த நாயினை மீட்டார். அப்போது நாயின் கழுத்தில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை படித்த போது தான் அவர் அதிர்ந்து போனார்.

நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கடிதத்தில், “இது மிகவும் நல்ல பழக்கங்களை கொண்ட நாய். இது குரைக்க மட்டும் தான் செய்யும், யாரையும் கடிக்காது. இந்த நாய் பால், முட்டை, பிஸ்கெட்டை அதிகம் சாப்பிடும். தேவையற்ற செயல்கள் எதையும் செய்யாது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இறுதியாக எழுதப்பட்ட வரிகள் தான் அதிர்ச்சியின் உச்சம். அதில் ''இந்த நாய் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் வேறொரு இனத்தைச் சேர்ந்த நாயுடன் உறவு வைத்துக் கொண்டதால் இந்த நாயை துரத்திவிடுவதாக'' அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பேசிய விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் ''அந்த நாய்க்கு என்ன தெரியும். அது வெறும் நான்கு கால் பிராணி. பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்து கொள்வது என்ன குற்றமா?. அந்த நாய் வேறொருவரால் தத்தெடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் தனது முன்னாள் உரிமையாளர் வந்து தன்னை கூட்டி செல்வார் என, சாலையையே அந்த நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது’ என அவர் கூறியுள்ளார்.