முகநூலில் பெண்களை மயக்கி நகை, பணம் பறித்த கன்னியாகுமரி காசி மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அவரது அடுக்குமாடி பங்களாவை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற சுஜி என்பவன் முகநூல் மூலம் மயக்கி இளம்பெண்களுடன் படம் எடுத்து அவற்றைக் காட்டி பிளாக்மெயில் செய்து நகை பணம் என பறித்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவரை தொடர்ந்து உள்ளூர் இளம்பெண் ஒருவரை ஏமாற்றி ஏராளமான நகை பணம் பறித்த புகார் மீது பொழிகாளை காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காசி வீட்டில் சோதனை செய்த போலீசார் மடிக்கணினி மற்றும் ஹார்டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதில் இருந்தும் ஏராளமான பெண்களுடன் காசி இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இதற்கு நான்கு நண்பர்கள் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நண்பர்களிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களில் இருவர் தங்களுக்கு தெரிந்த உண்மைகளை போலீசாரிடம் விவரமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் பெரிய இடத்துப் பெண்கள் வரை காசியின் வலையில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. திருட்டுப்பயலே சினிமா பாணியில் தன்னிடம் சிக்கிய வசதியான வீட்டுப் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது ஒருபுறமிருக்க இளம் பெண்களிடம் மிரட்டி பறித்த பணத்தில் தனது வீட்டை நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி மாளிகையாக மாற்றி இருக்கிறார் காசி.

 

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்பகுதியில் நாலடி ஆக்கிரமித்து கட்டி அந்த வீட்டில் தரைத்தளம், முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனுமதியின்றி இரண்டாவது மற்றும் மூன்றாவது நான்காவது தளங்கள் என சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விதி மீறிய கட்டடங்களை இடிக்க முடிவு செய்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அறிவிப்பு ஒன்றை அவரது வீட்டில் ஒட்டி உள்ளது. எப்படி அதிவேகமாக பெண்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்து அதிவேகத்தில் காசி முன்னேறினானோ அதே வேகத்தில் காசி காவல்துறையிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காசியின் பிளாக்மெயில் வேலைகளுக்கு உடந்தையாக இருந்த அனைத்து நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.