விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி ரேகா. பாலாஜி அந்த பகுதியின் திமுக வார்டு செயலாளராக இருந்திருக்கிறார். இவர் லாரி, பஸ்களுக்கு பாடி கட்டும் தொழில் செய்து வந்ததோடு நிலம் வாங்கி விற்கும் புரோக்கராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலையில் பாலாஜி வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். 

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடையே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் ஆண் சடலம் ஒன்று கழுத்தறுப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்திருக்கிறது. விரைந்து வந்த காவலர்கள் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில், திமுக பிரமுகர் பாலாஜி என்பது தெரிய வந்தது. 

தகவலறிந்து வந்த பாலாஜியின் மனைவியும் உறவினர்களும் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக உறவினர் ஒருவரால் பாலாஜி படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.