திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த முனியாண்டி மகன் பாலச்சந்தர் (37). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக  இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவருக்கு, தஞ்சையில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை  பாலச்சந்தர் தனது வீட்டுக்கு அருகேயுள்ள தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல்  அரிவாள்களால் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.