தஞ்சாவூர் அருகே திமுக முன்னாள் கவுன்சிலர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக பிரமுகரான கோபால் சங்கர் என்பவர், கவுன்சிலராக இருந்தவர். அவர் இன்று இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்த போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக கழுத்து மற்றும் பல்வேறு வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த மர்ம கும்பல் சாவகாசமாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.  

இந்த கொலை தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது என தெரிவந்துள்ளது. 

இது தொடர்பாக கோபால் சங்கரின் மைத்துனர் அன்பரசு என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூலிப்படை ஏவி கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். கொல்லப்பட்ட சங்கருக்கு தேவி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளது.