கூடுவாஞ்சேரியில் திமுக முன்னாள் கவுன்சிலர் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலனியைச் சேர்ந்த மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர், 2 முறை கவுன்சிலராக இருந்துள்ளார். 

நேற்று இரவு நந்தீஸ்வரம் காலனி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், மோகனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்த  மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியா அல்லது முன்விரோதமா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.