ஓசூர் அருகே திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மன்சூர் அலி(49). ரியல் எஸ்டேட் அதிபர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் ஓசூர் காமராஜ் காலனி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மன்சூர் அலியை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மன்சூர் அலி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இவரையும் ஜான்பாஷா என்பவரையும் ஒரு கும்பல் காரில் கடத்தி ஜான்பாஷா குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. போலீசார் சுற்றி வளைத்ததால் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு கும்பல் தப்பியது. இதில் ஜான்பாஷா உயிரிழந்தார். அப்போது தப்பிய மன்சூர் அலி தற்போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.