திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருள்சாமி சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி டெய்சி டென்சியா. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது கடைசி மகள் மகள் ஹெலன் சோபியா திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவர் தினமும் முருகபவனம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில்  அருள்சாமி தன்னுடைய மகள் ஹெலன் சோபியாவை மொபட்டில் அழைத்துக்கொண்டு, முருகபவனம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அங்கு மகளை இறக்கிவிட்டுவிட்டு, மொபட்டில் திரும்பி சென்றுகொண்டு இருந்தார். இந்திரா நகர் அருகே வந்தபோது அந்த பகுதியில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள்களுடன் அருள்சாமியை வழிமறித்தது.

ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்த அருள்சாமி மொபட்டை அங்கேயே போட்டுவிட்டு, அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை அந்த கும்பல் விடாமல் விரட்டிச்சென்றது. அரிவாள்களுடன் விரட்டுவதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த கும்பல், அருள்சாமியை விரட்டிச்சென்று மறித்து சரமாரியாக வெட்டியது. இதில் தலை, முகம், கால், கை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.

ஓடாமல் இருக்க அந்த கும்பல் முதலில் அருள்சாமியின் கால்களில் வெட்டியது. இதையடுத்து அவர் திருப்பி தாக்காமல் இருப்பதற்காக அவருடைய 2 கைகளையும் துண்டாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அருள்சாமியின் தலையில் வெட்டியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், அருள்சாமியின் முகத்தை சரமாரியாக வெட்டி சிதைத்தது. அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே அங்கு தயாராக நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அருள்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருள்சாமியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.